சென்னை:டெட் முடித்த ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நியமனத்தேர்வை புறக்கணித்து 10,000 க்கும் மேற்பட்ட கடிதங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பினர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்குரிய போட்டித் தேர்வினை நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் என 2012 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவதை எதிர்த்து நீதிமன்றத்தில் பலர் வழக்குகளும் தொடர்ந்தனர்.
மேலும், 2018 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமனம் செய்வதற்கு அரசாணை 149 இன் படி மீண்டும் ஒரு போட்டி தேர்வினை எழுத வேண்டுமென அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர்கள் பணி நியமனம் நடைபெறவில்லை.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் பள்ளிக்கல்வித்துறையில் பணி நியமனம் செய்வதற்கான போட்டி தேர்வு நடத்துவதற்குரிய அரசாணை 149 ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கான உச்சபட்ச வயது வரம்பு பொது பிரிவினருக்கு 53 எனவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 58 எனவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான போட்டி தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நவம்பர் 1 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கத்தினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகளாக பணியின்றி வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். ஆசிரியர் தகுதித்தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு இதுவரை 40 ஆயிரம் பணிநியமனங்கள் மேற்கொள்ளபட்டுள்ளது.
அதே வேளையில் நாங்கள் தேர்வெழுதி வெற்றி பெற்று 5 ஆண்டுகளுக்கு பிறகு 2018 ம் ஆண்டு கடந்த கால அரசு, அரசாணை 149 ஐ பிறப்பித்தது. ஏற்கனவே டெட் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் பெற மீண்டும் ஒரு தேர்வு எழுத வேண்டும் என ஒரு அர்த்தமற்ற அரசாணையை கொண்டுவந்தது.