சென்னை:ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமன போட்டித் தேர்வு என்ற அரசாணை 149 நீக்கம் செய்வோம் என கூறிய திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் ரவி கூறுகையில், “ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறு நியமன போட்டித்தேர்வு என்ற அரசாணை 149 நீக்கம் செய்ய வேண்டும். பணி நியமனத்தின்போது வயதை கருத்தில் கொண்டு பழையபடி ஆசிரியர் பணி பெறும் வயதை 57ஆக உயர்த்த வேண்டுகிறோம். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை 177-ன் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டுகிறோம்.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பத்தாண்டுகளாக பணி வாய்ப்பின்றி காத்திருக்கும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித்தேர்வு என்ற அரசாணை வெளியிட்டபொழுது, அதனை தற்போது முதலமைச்சர் எதிர்த்ததுடன், எங்களின் போராட்ட களத்திற்கே வந்து ஆதரவு தெரிவித்தார்.