டெட் தேர்வில் தேர்சி பெற்ற ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் சென்னை: பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பு, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களுடன் போராட்டத்தை நிறைவு செய்யும் விதமாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பசுமை வழிச் சாலையில் உள்ள தனது வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்படி, ஒவ்வொரு சங்கங்களின் பிரதிநிதிகளை தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்படி மூன்று ஆசிரியர் சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அதன் காரணமாக மூன்று ஆசிரியர் சங்கத்தினரும் தங்களது தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர போவதாக அறிவித்தனர்.
இதையும் படிங்க: அமைச்சர் உடனான பேச்சுவார்த்தை தோல்வி.. சென்னையில் தொடரும் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த 2013-ஆம் ஆண்டு டெட் தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வடிவேல் கூறும்போது, “டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகக் காத்திருக்கும் எங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாக இருக்கிறது. எங்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்ற முடிந்துள்ளது.
அதேபோல அரசாணை 149 ரத்து செய்ய வேண்டும் என்பதும் எங்களது கோரிக்கையாக உள்ளது. எங்கள் கோரிக்கைகள் இரண்டையும் பரிசீலிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களை ஆதரித்த திமுக தற்போதும் ஆதரிக்கும் என நம்புகிறோம்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் 2013-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டி தேர்வு நடத்துவதா என தற்போது முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சியாக இருந்தபோது பல்வேறு இடங்களில் எங்களுக்கு ஆதரவாகவும் வாக்குறுதி அளித்தார். மேலும், எங்களுக்கு தீர்வு எட்டப்படும் வரை எங்களது போராட்டமும் தொடரும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்" - பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் அறிவிப்பு!