தமிழ்நாடு கேரளா எல்லைப்பகுதியான களியாக்காவிளை அருகேயுள்ள படந்தாலூமூடு சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் வில்சன் ஜனவரி 8ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எஸ்ஐ கொலையில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடிக்க காவல்துறை தரப்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதன்பின்னர் தமிழ்நாடு கேரளா எல்லையில் அக்கொலையில் தொடர்புடைய நான்குபேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்றிரவு வில்சன் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியை சப்ளை செய்த இஜாஸ் பாட்சாவை கியூ பிரிவு காவலர்கள் கைது செய்துள்ளனர்.
ஆம்னிபஸ் டிரைவரான இவர், கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொலைசெய்த தவ்பீக் மற்றும் அப்துல் தமீம் ஆகியோருக்கு மும்பையிலிருந்து துப்பாக்கிகளை வாங்கி சப்ளை செய்தததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் சப்ளை செய்த மூன்று துப்பாக்கிகளை கைப்பற்றிய காவலர்கள் மீதமுள்ள ஒரு துப்பாக்கியை தற்போது தீவிரமாக தேடிவருகின்றனர்.
அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ் கொலை வழக்கு மற்றும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்த வழக்கு என இருவழக்குகளில் ஆஜராகாமல் இருந்த காஜா மொய்தீன், நவாஸ், அப்துல் சமீம் ஆகிய மூவரை தமிழ்நாடு காவலர்கள் தீவிரமாக தேடிவந்தனர். கடந்த இரண்டு மாதமாக இவர்களைப்பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையல், இவர்களுடன் தொடர்பில் இருந்த இருவரை பிடித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், காஜா மொய்தீன் உள்பட மூவர் தப்பிச்செல்வதற்கு உதவி செய்த முகமத் அனிப் கான், இம்ரான் கான், முகமது சையத் ஆகியோர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதன் பின்னர் பெங்களூரு விரைந்த கியூ பிரிவு காவலர்கள் அவர்கள் மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 10க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் மற்றும் மூன்று துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.