சென்னைமாநகராட்சி அலுவலகம் எதிரே, சென்னை மருத்துவக்கல்லூரியின் மாணவ மாணவியர் விடுதியின் பின்புறம் உள்ள ஜெனரேட்டர் அறையில் இருந்த மின்மாற்றியில் இன்று மாலை 4.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதுமே கரும்புகையால் மூடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த விடுதி மாணவர்கள் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் திருவல்லிக்கேணி, எழும்பூர், எஸ்பிளனேடு, வேப்பேரி மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய 5 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சிந்தாதிரிப்பேட்டை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாணவர் விடுதிக்கு பின்புறம் உள்ள மைதானத்தில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருவதாகவும், அதன்பேரில் மைதானத்தில் இன்று காலை முதல் ஜேசிபி வாகனம் மூலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சீரமைப்பு பணியின்போது, ஜெனரேட்டர் அறைக்கு செல்லும் மின்சார வயர் ஜேசிபி இயந்திரத்தில் பட்டு பழுதடைந்துள்ளது. இதனால், ஷார்ட் சர்க்யூட் ஆகி மின்மாற்றியில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தீ விபத்தால் மின்மாற்றி முழுவதும் எரிந்த நிலையில் ஜெனரேட்டர் மற்றும் ஜெனரேட்டர் அறை பழுதடைந்தது. பின்னர், சம்பவ இடத்தில் மருத்துவக்கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தீ விபத்தால் மாணவ மாணவியர் விடுதிகளுக்கு மொத்தமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், புதிய ஜெனரேட்டர் வரவழைக்கப்பட்டு ஓரிரு மணி நேரத்தில் மின்சாரம் விநியோகம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், தீ விபத்தில் பழுதடைந்த கட்டடத்தை மறுசீரமைப்பு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
சென்னை மருத்துவ கல்லூரியில் பயங்கர தீ விபத்து இதையும் படிங்க: ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கு இலவசமாக பயிற்சிபெற விண்ணப்பம் வெளியீடு!