தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயிரம் பள்ளி, கல்லூரிகளில் மாடித்தோட்டம்: இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் உள்ள ஆயிரம் பள்ளி, கல்லூரிகளில் இயற்கை விவசாய முறையில் மாடித் தோட்டம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தோட்டக்கலைத் துறை கூடுதல் இயக்குநர் தமிழ் வேந்தன் கூறியுள்ளார்.

terrace garden

By

Published : Nov 5, 2019, 1:51 PM IST

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க தமிழ்நாடு வேளாண்மைத் துறையும் தோட்டக்கலைத் துறையும் இணைந்து பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்துவருகிறது. அதனடிப்படையில் பொதுமக்கள், மாணவ மாணவிகளிடையே இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி, கல்லூரிகளில் மாடித் தோட்டம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இயற்கையை காக்க மாடித் தோட்ட பயிற்சி

இதற்காக தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் முதல்கட்டமாக ஆயிரம் பள்ளிகளில் மாடித் தோட்டம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை கூடுதல் இயக்குநர் தமிழ் வேந்தன் கூறுகையில்,

"நகர்ப்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளிகளில் மாடித் தோட்டம் ஏற்படுத்தவுள்ளோம். இதற்காக ஆறாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செய்முறை வடிவம் செய்து காட்டப்படும். பள்ளி, கல்லூரிகளில் காலியாக இடமிருந்தால் மாடித் தோட்டம் அமைக்கப்படும்.

முதற்கட்டமாக ஊரகப் பகுதிகளில் ஆயிரம் பள்ளிகளில் இதனை செயல்படுத்தவுள்ளோம். இதற்காகப் பள்ளி தலைமையாசிரியர் அல்லது ஆசிரியர் தலைமையில் ஒரு தோட்டக்கலைக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர், தோட்டக்கலை உதவி இயக்குநர், துறைத் தலைவர், மாணவர் என ஐந்து பேர் இதில் இடம்பெறுவர். விருப்பமுள்ள மாணவர்கள் அனைவரும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு மாடித் தோட்டம் அமைக்கும் பணி தொடங்கப்படும்.

தோட்டக்கலைத்துறையின் பரிணாம வளர்ச்சி

தோட்டக்கலைத் துறை சார்ந்த அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று மாடித் தோட்டம் அமைத்துக் கொடுத்து அவற்றை அமைக்கும் வழிமுறைகளை ஆசிரியர்களிடம் கற்றுத் தருவார்கள். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிக்கும் மாடித் தோட்ட விழிப்புணர்வுக்காக இரண்டு ஆண்டிற்கு தலா ஐயாயிரம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஆயிரம் சதுரஅடி முதல் ஐந்து ஏக்கர் வரையில் மாடித் தோட்டம் அமைக்கப்படுகிறது.

இதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் இந்தப் பணிகள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். முதலில் அரசுப் பள்ளிகளில் இதை நடைமுறைப்படுத்தியுள்ளோம். பின்னர் படிப்படியாக தனியார் பள்ளிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும்

வகைவகையாய் வளர்ந்து வரும் கன்றுகள்

இயற்கை விவசாயத்தின் மீது மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு மற்றவர்களுக்கு மாடித் தோட்டம் அமைக்க கற்று கொடுத்து எதிர்காலத்தில் விவசாய தூதுவர்களாகவும் மாறுவார்கள்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details