சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டன. இருப்பினும், வழக்குகள் காரணமாக, சில கூட்டுறவு சங்கங்களில், 10 முதல் 14 மாதங்கள் தாமதமாக, 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தான் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டன.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதாக கூறி, கூட்டுறவு சங்கங்களை நிர்வகிக்க அதிகாரியை நியமித்து கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்தும், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பின் பதவிக்காலம் அமலுக்கு வரும் என கூறி, 2024-ஆம் ஆண்டு வரை கூட்டுறவு சங்க நடவடிக்கையில் தலையிட அரசுக்கு தடை விதிக்கக் கோரியும், கூட்டுறவு சங்கங்களை கலைக்க தடை கோரியும், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தேர்தல் நடந்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பிறகே சங்கங்கள் செயல்பட துவங்கப்பட்டன. எனவே, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஐந்து ஆண்டுகளுக்கான பதவிக்காலம் துவங்குகிறது. உறுப்பினர் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து அல்ல என வாதிடப்பட்டது.