பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், இன்று (23-06-2020) காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார். சுமார் 15 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நீடித்த நிலையில், சந்திப்பின்போது பள்ளிக் கல்வித் துறை சார்ந்த பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து முதலமைச்சரிடம் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில், மதிப்பெண்கள் வழங்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழக்கூடும் என அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே, மதிப்பெண்களுக்கு பதிலாக சிபிஎஸ்இ அமைப்பில் இருப்பது போல் ஏ, பி, சி என கிரேடு முறையை வழங்கலாம் என ஆலோசித்ததாகவும், இது தொடர்பாக முதலமைச்சரின் ஆலோசனையை அமைச்சர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வரும் கல்வி ஆண்டில் பல்வேறு மாற்றங்களை செய்வதற்கு பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்ட நிலையில், அது குறித்தும் முதலமைச்சருடன், அமைச்சர் விரிவாக ஆலோசனை நடத்தியதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.