சென்னைகாவல்துறையில் குற்றங்களை எளிதாகக் கண்டறியவும், அடிக்கடி குற்றச் சம்பவங்கள் நடைபெறும் இடங்களைக் கண்காணிக்கும் வகையிலும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி GIS (Geographical Information System) MAPPING தயாரிக்கும் திட்டம் தொடக்கப்படவுள்ளது. நிர்பயா நிதியின் கீழ் 5 கோடி ரூபாய் செலவில் சென்னை காவல்துறையை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய திட்டமானது தொடக்கப்படவுள்ளது.
இதன்படி சென்னை மாநகர காவல் துறையில் ஒவ்வொரு காவல் நிலைய கட்டுப்பாட்டிலும் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற குற்றங்கள், தொடர்புடைய குற்றவாளிகளின் விவரம், குற்றத்தின் தன்மை உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கி இந்த GIS MAPPING-ஐ தயாரிக்க உள்ளனர்.
அதனடிப்படையில் உதாரணமாக அண்ணா சாலை காவல் நிலையத்திற்குப் புதிதாக வரும் காவல் ஆய்வாளருக்கு பிரத்யேகமாகத் தயாரிக்கப்படவுள்ள GIS MAPPING செயலியை அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுத்தால்.அதன் மூலம், கடந்த 5 ஆண்டுகளில் அண்ணா சாலை காவல் நிலைய எல்லையைச் சுற்றி நடந்துள்ள கொலைக் குற்றங்கள், செயின் பறிப்பு சம்பவங்கள், கொள்ளை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கல்லூரி மாணவர்களின் மோதல் சம்பவங்கள், திருட்டு, இரவு நேரங்களில் நடந்த குற்றங்கள், தற்கொலைகள் என அனைத்து குற்றங்களையும் நொடிப் பொழுதில் அவரால் கண்டு தெரிந்து கொள்ள இயலும் வகையில் இந்த புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
குற்றங்களை எளிதாக கண்டறிய புதிய திட்டம் மேலும், இந்த GIS MAPPING செயலியில் குற்றச் சம்பவங்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அவசர அழைப்புகளில் ( அவசரகால அழைப்பு எண் - 100 , 112 ,1098,1091,181) பதிவான விவரங்கள், காவல்துறைக்கென உள்ள செயலியில் பெறப்பட்ட புகார்கள் (காவலன் செயலி), புகாரை பெற்றதற்கான CSR விவரங்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.
காவல்துறையில் குற்றங்களை எளிதாக கண்டறிய புதிய திட்டம் சென்னை காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள CCTV கேமராவில் பதிவாகும் வீடியோ பதிவுகளும் இந்த GIS MAPPING-ல் இணைக்கப்பட்டிருக்கும் என்பதால் இதன் மூலம் எந்த பகுதியில் அதிகமான கூட்டம் கூடினாலோ அல்லது குற்றச் சம்பவங்கள் ஏதேனும் நடைபெற்றாலோ உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பதற்கும் ஏதுவாக இருக்கும் என சென்னை காவல்துறையின் உயர் அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவல்துறையின் ரோந்து வாகனங்கள் எங்கே உள்ளது என்பதையும் இந்த GIS MAPPING மூலம் எளிதாகக் கண்காணிக்க முடியும் எனவும், இதன் மூலம் தொடர்ச்சியாகக் குற்றம் நடைபெறும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு அங்குக் காவல் துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் GIS MAPPING திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் காவல் துறையினர் மீது எழுவது உடனடியாக கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், குற்றம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இந்த செயலியில் பதவேற்றம் செய்யப்பட இருப்பதால் எளிதாக அவற்றை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளைக் காவல் துறையினர் விரைவாக மேற்கொள்ள உதவும் எனவும் காவல்துறை உயர் அதிகாரிகளால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டத்தை அமல்படுத்தும் பணிகளுக்கான டெண்டர் இன்னும் சில நாட்களில் விடப்படும் எனவும், அதனைத் தொடந்து 3 அல்லது 4 மாதங்களுக்குள் இந்த GIS MAPPING திட்டம் முழுமை பெற்று பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும் சென்னை காவல்துறையின் உயர் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜக மாபெரும் வெற்றி: ''2024-ம் நமதே!" - குஷி மோடில் பிரதமர் மோடி