எம்ஜிஆர் சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த எஸ்.வி. சேகர், காவியை களங்கம் என குறிப்பிடும் முதலமைச்சர், களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்டு 15 ஆம் தேதி ஏற்றப்போகிறாரா? தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா? என சமூக வளைத்தளங்களில் காணொலி வெளியிட்டார்.
தேசியக் கொடியை அவமதித்தும், முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசிய பாஜக நிர்வாகி எஸ்.வி சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கோரி எஸ்.வி. சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அவரது கருத்துக்கு மன்னிப்பு கோரினால் எஸ்.வி. சேகர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, எஸ்.வி. சேகர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "தேசியக் கொடியில் காவி நிறம் இருக்கும் போது அதை சிலைக்கு அணிவித்ததை எப்படி அவமதித்ததாக கூறமுடியும் என முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினேன்.
எனது வாழ்நாளில் நான் இதுவரை தேசியக்கொடியை அவமதித்து இல்லை. வாழ்நாள் முழுவதும் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் எந்த கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டேன் என உத்திரவாதம் அளிக்கிறேன். எனது பெற்றோர் மற்றும் உறவினர்களை விட அதிகமாக தேசியக்கொடியை நேசிக்கிறேன். அதனால் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
பதில் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, செப்டம்பர் 7 ஆம் தேதி வரை எஸ்.வி. சேகர் மீது கைது நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: அரியலூரில் பெரியார் சிலை மீது தார் ஊற்றி அவமதிப்பு!