தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் - விசாரணை ஆணையத்துக்கு 10 நாட்கள் கூடுதல் அவகாசம்!

சென்னை: ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக்குழு எழுதிய கடிதத்திற்கு உயர்கல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

சூரப்பா
anna university

By

Published : Jun 9, 2021, 5:03 PM IST

கடந்த 2018 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சூரப்பா, கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி ஓய்வு பெற்றார். அவர் பணியில் இருந்த போது, பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் சூரப்பா தன்னிச்சையாக செயல்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

மாணவர் சேர்க்கை, இட ஒதுக்கீடு மறுப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் சூரப்பாவுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதுமட்டுமில்லாமல், சூரப்பா ரூ.248 கோடி ஊழல் செய்வதாகவும் புகார் எழுந்தது. அந்தப் புகாரின் பேரில், சூரப்பாவுக்கு எதிரான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்த விசாரணைக் குழுவானது அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல்வேறு அலுவலர்கள், பணியாளர்களிடம் விரிவான விசாரணை நடத்தியது. மூன்று மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணை முழுமை அடையாததன் காரணமாக, மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

சூரப்பாவைத் தவிர அனைத்து தரப்பினரிடமும் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சூரப்பாவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு பதிலளிக்குமாறு விசாரணைக்குழு சார்பில், கடந்த மே 3 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில், ‘உங்கள் மீதான குற்றச்சாட்டு, அதுதொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில், உங்கள் மீது ஏன் குற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது? என கேள்வி எழுப்பி, இதற்கு தகுந்த விளக்கத்தை விசாரணை ஆணையத்துக்கு ஏழு நாட்களுக்குள் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு சூரப்பா தனது வழக்குரைஞர் மூலம் மே 11 ஆம் தேதி அனுப்பிய பதில் மனுவில், விசாரணைக்குழு எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் தான் எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகள், ஊழல், முறைகேடு புகார்களை முற்றிலும் மறுப்பதாகவும், தன்னை விசாரணை செய்யக்கூடாது என, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதையும் சுட்டிக்காட்டி பதில் அளித்திருந்தார்.

இதையடுத்து விசாரணைக்குழு இந்த விசாரணையின் முடிவான அறிக்கையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு, உயர்கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியது.

அதில், தற்போது கரோனா பொது முடக்கத்தால் சூரப்பா மீதான புகாரில் இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும், பொது முடக்கம் நிறைவடைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், பத்து நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து விசாரணைக்குழு எழுதிய கடிதத்திற்கு உயர்கல்வித்துறை ஒப்புதல் அளித்து அவகாசம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரணை செய்ய, தமிழ்நாடு அரசின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை அலுவலராக, கடந்தாண்டு நவம்பர் 11ஆம் தேதி நியமிக்கப்பட்டார். விசாரணைக்குழுவின் காலம் நடப்பாண்டு மே இறுதியுடன் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details