சென்னை:கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆறு மாதத்திற்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனச் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜய ராணி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
550 மருந்தாளுநர்கள் நியமனம்
மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் கடந்த ஜூன் 28ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில், "கரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையைப் போக்க ஆறு மாதத்திற்குத் தற்காலிக அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். வருங்காலத்தில் நிரந்தரப்படுத்த உரிமை கோரக் கூடாது.
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு இவர்களுக்கு மாதம் ரூபாய் 12,000 ரூபாய் தொகுப்பு ஊதியம் வழங்கப்படும். இதற்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் அனுமதித்துள்ளார்" எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் 550 மருந்தாளுநர் பணியிடங்கள் மாவட்டங்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
இந்தப் பணியிடங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன.
சென்னையில் காலிப்பணியிடங்கள்
சென்னை மாவட்ட ஆட்சியர் விஜய ராணி, திருவல்லிக்கேணியில் உள்ள சமூக மகப்பேறியியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனைக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வுசெய்வதற்கான அறிவிப்பை நிபந்தனைகளுடன் வெளியிட்டுள்ளார்.
அதில் நர்சிங், மருந்தாளுநர், ஆய்வக உதவியாளர், மயக்க மருந்தியல் தொழில்நுட்புனர், இஜிசி தொழில்நுட்பப் பணியாளர்கள், மருத்துவமனை பல்துறை பணியாளர், ரேடியாேகிராஃபர் ஆகிய பணியிடங்களுக்கு 134 பணியாளர்கள் நியமனம் செய்யப்படும். இதற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் வாக்குறுதி
திமுகவின் தேர்தல் அறிக்கையில் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு, ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியரும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் தொடர்ந்து திமுக ஆட்சியிலும் மருத்துவத் துறையில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுவருவது இளைஞர்களை கலக்கமடையச் செய்துள்ளது.
இதையும் படிங்க: கால்நடை உதவி மருத்துவர்கள் போராட்டம்