புதுச்சேரியில் உள்ள தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ மேற்படிப்புகளுக்கான கட்டணங்களை நிர்ணயிக்கும்படி, புதுச்சேரி கட்டண நிர்ணயக் குழுவுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அதில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுக்கு 14 லட்சம் ரூபாய் கட்டணமாக நிர்ணயித்த போதும், 40 முதல் 50 லட்சம் வரை கட்டணம் செலுத்த கூறியது சட்டவிரோதமானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 10 லட்சம் ரூபாய் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. மேலும், தனியார் சுயநிதி மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு கட்டணம் நிர்ணம் செய்வது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க குழு அமைக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
பின்னர், இந்த வழக்கை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கட்டண நிர்ணயம் தொடர்பாக விதிகள் வகுக்க குழு அமைக்கப்பட்டு உள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்தது. இந்த விதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதை அமல்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் பெறும்வரை, தற்காலிகமாக 2017-18 முதல் 2020-21ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்துக்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கும்படி, புதுச்சேரி கட்டண நிர்ணயக் குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இக்குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி கொடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.