தமிழ்நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பது என்பது தொடர் நிகழ்வாக இருப்பதால், கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், கோயில் குளங்கள், அருவிகளில் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் நீச்சலில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் கொண்ட குழு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி, கடந்த 2014ஆம் ஆண்டில் மட்டும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 884ஆக உள்ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீர்நிலைகளில் உயிரிழந்தவர்கள் 90 விழுக்காட்டினர் 12 வயதிற்குட்பட்டவர்கள் எனவும், இந்த மரணங்களைத் தடுக்க கடற்கரைகளில் கண்காணிப்பு கோபுரங்களை அமைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வு, உயிரிழப்பை தடுக்கும் வகையில் கோவில் குளங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய இந்து அறநிலை இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அருவிகள், ஆறுகள், உள்ளிட்ட நீர்நிலைகள், சுற்றுலா தளங்களில் உயிரிழப்புகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து அறிக்கை பெற்று தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், கடற்கரை பகுதிகளில் உயிரிழப்புகளை தடுப்பதற்காக மாநில அரசுக்கு இதுவரை ஒதுக்கிய நிதி தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க...வெள்ளை மாளிகை தெரியும்...அதுக்குள்ள எப்படியிருக்கும்னு தெரியுமா?