சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில், கோயில் நிலத்தை நீண்டகாலத்துக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த நவம்பர் 28ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல் குத்தகைக்கு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எத்தனை ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்படுகிறது என்ற விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.