சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. கோடை வெயில் அதிகரிக்க தொடங்கியிருக்கும் நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிக் காரணமாக மழை பெய்து வருகிறது. வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. வெயில் அதிகரிக்க தொடங்கிய நிலையில் மழை பெய்ததால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இது குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தற்போது தென் தமிழகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை வடக்கு தெற்காக கிழக்கு திசை காற்றும்; மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி வளிமண்டலத்தில் நிலவுகிறது.
இதன் காரணமாக மார்ச் 20ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மிதமான கோடை மழை பெய்யும். சென்னை புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில ஒரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக குமரி மாவட்டம் பெருஞ்சாணி, புத்தன் அணையில் 6 செ.மீட்டரும், கோவை, மதுரை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரளவு கோடை மழை பெய்துள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடைகால வெப்பநிலை கடலோர மாவட்டங்களில் அதிகமாக இருக்கும். உள் மாவட்டங்களில் குறைவாக இருக்கும்.