சென்னை: தெலங்கானா மாநிலத்தில் வருகிற 30ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாதுகாப்புப் பணியில் ஈடுபட கூடுதல் காவல் படையினர் தேவைப்படுவதாக உதவி கேட்டு, தெலங்கானா அரசு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.
அதன் அடிப்படையில், தெலங்கானா மாநிலத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் தேர்தலுக்காக சுமார் 5,000 ஊர் காவல் படை போலீஸ் தேவைப்படுவதாகவும், அதை தங்கள் மாநிலத்திலிருந்து அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு, தெலங்கானா மாநில அரசு கோரிக்கை வைத்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதை அடுத்து தமிழ்நாடு அரசு, தெலங்கானா மாநில அரசின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு ஊர் காவல் படை டிஜிபி வன்னிய பெருமாளுக்கு உத்தரவிட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து, டிஜிபி வன்னிய பெருமாள் அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் இது சம்பந்தமாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், "தெலங்கானா மாநிலம் தேர்தல் பணியின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பம் உள்ள காவலர்கள், வருகிற 27ஆம் தேதிக்குள் தெலங்கானா மாநிலத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளவும்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "இது மிக அவசர கால நடவடிக்கை" எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கிராமம் ஒன்று..! எம்.எல்.ஏ மட்டும் ரெண்டு..! அரசியல் ஆச்சரியம் நிறைந்த அஞ்சோரா கிராமம்!