தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 21, 2019, 10:11 PM IST

ETV Bharat / state

தேர்தல் நடத்தை விதிகளால் மக்கள் நலப்பணிகள் முடக்கம் - பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த பிறகும் தேர்தல் நடத்தை விதிகள் இன்னும் அமலில் இருப்பதால் மக்கள் நலப் பணிகள் முடங்கியுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Dr S RAMADOSS

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 23ஆம் தேதிதான் நடைபெறவிருக்கிறது என்பதால் மே மாதம் 27ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வாக்குப்பதிவு முடிவடையும் வரை இத்தகைய கட்டுப்பாடுகள் இருப்பதில் தவறில்லை. ஒருவகையில் பார்த்தால் இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியமானவையும் கூட. ஆனால், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் இந்தக் கட்டுப்பாடுகள் அவசியமா? என்பதுதான் இப்போதைய வினாவாகும்.

தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவுகிறது. தலைநகர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது பெரும் சிக்கலாகக் கூடும்.

தமிழ்நாட்டில் வறட்சி, கஜா புயல் உள்ளிட்ட பாதிப்புகளாலும், வறுமையாலும் வாடும் மக்களுக்கு ஒருமுறை நிதியுதவியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிவைத்தார். ஆனால், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் புகார் மனு அடிப்படையில், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி இந்தத் திட்டம் தேர்தல் ஆணையத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதேபோல், உழவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வழங்கும் மத்திய அரசின் திட்டமும் முடக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்துக்கும் காரணம் தேர்தல் நடத்தை விதிகள்தான். தேர்தல் நடைமுறை நிறைவடைய இன்னும் 37 நாட்கள் உள்ளன. அதுவரை ஏழை, எளிய மக்களுக்கும் உழவர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய உதவிகளை நிறுத்திவைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

அரசின் உதவிகள் காலத்தினால் செய்யப்படுபவையாக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளால் தொடங்கப்பட்டு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிதி உதவித் திட்டங்களை இன்னும் 37 நாட்கள் கழித்து வழங்குவது பயனளிக்காது.

எனவே, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் நடத்தை விதிகளை தளர்த்தி மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவித் திட்டங்களையும், மக்களுக்குத் தேவையான மற்ற நலத்திட்டப் பணிகளையும் செயல்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். தமிழ்நாடு அரசும் இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details