சென்னை: தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவின் அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று அளிக்கப்படுகிறது.
2020-2021ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதேபோன்று, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் கடந்த ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கைப் பெற்றுள்ளனர்.
நீதிபதி த. முருகேசன் தலைமையில் ஆணையம்
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கை தொழிற்கல்விகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் குறைந்த அளவில் உள்ள நிலையே இருப்பின், இந்நிலையைச் சரிசெய்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய, டெல்லி உயர் நீதிமன்றத்தின்ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூன் 15ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம், தனது அறிக்கையினை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும் எனத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி முருகேசன் தலைமையிலான முதல் கூட்டம் ஜூன் 18ஆம் தேதி தகவல் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் தொழிற்கல்விப் படிப்புகளில் சேர்ந்துள்ள விவரங்களை அந்தத் துறையினர் அளிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியிருந்தார்.