சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத்தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றது.
அதன் பின்னர் திமுக அரசால் மேற்கொள்ளப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்டப் பணிகள் குறித்து உணவு மற்றும் உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர் தலைமையில் குழு அமைப்பு
அதில், 'நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தல், நெல் கொள்முதல் செய்வதற்கான வழிமுறைகள், நெல் சேமித்து வைத்தல், நகர்வு செய்தல் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் முதன்முறையாக அரசால் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கென ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் தலைமையில், வேளாண் நேர்முக உதவியாளர், வேளாண் துறை இணை இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர், விவசாயிகள் சார்பாக இரு பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழு தேவைக்கேற்ப நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறந்து, உடனடி நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளின் குறைகளைத் தீர்த்து, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:3.38 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கல்!