தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஐஐடி மாணவர்கள் தற்கொலை - திலகவதி தலைமையிலான விசாரணை குழு அறிக்கை சமர்ப்பிப்பு! - ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி

சென்னை ஐஐடியில் தொடரும் மாணவர்கள் தற்கொலை தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தலைமையிலான விசாரணைக் குழு இன்று அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

Team
சென்னை ஐஐடி

By

Published : Aug 16, 2023, 2:33 PM IST

சென்னைஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த ஆண்டில் மார்ச் மாதம் வரையில் மட்டும் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த மார்ச் மாதம் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்த ஆந்திர மாணவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அதே மாதம் 31ஆம் தேதி, சென்னை ஐஐடியில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த, மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவர் சச்சின்குமார் ஜெயின்(31), வேளச்சேரியில் அவர் தங்கியிருந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து மாணவர் சச்சின்குமார் தற்கொலைக்கு காரணமான ஐஐடி பேராசிரியர் கே.வி.ஷென் மீது நடவடிக்கை எடுக்காமல், அவரைக் காப்பாற்ற ஐஐடி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாகக் குற்றம் சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவரின் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, ஐஐடி மாணவர்கள் தற்கொலை தொடர்பாக விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இக்குழு அமைக்கப்பட்டது. இதில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சபிதா, கண்ணகி பாக்கியநாதன், பேராசிரியர் ரவீந்திர கெட்டு, அமல் மனோகரன் ஆகிய 5 பேர் இடம் பெற்றிருந்தனர். இக்குழு, ஐஐடி மாணவர்கள், தற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவர்களின் பெற்றோர், நண்பர்கள் உள்ளிட்ட பலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. நேரடியாகவும், காணொளி வாயிலாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், சென்னை ஐஐடி மாணவர்கள் தற்கொலை தொடர்பாக, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தலைமையிலான குழு இன்று(ஆகஸ்ட் 16) விசாரணை அறிக்கையை சென்னை ஐஐடியிடம் சமர்ப்பித்துள்ளது. சுமார் 300 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில், ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் பேராசிரியர்களிடையே இணக்கமான சூழலை உறுதிப்படுத்த வேண்டும், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் வகையிலான நடவடிக்கைகள் இடம்பெறாத வகையில் ஐஐடி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: Madras IIT: சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை: விசாரணை குழு அமைப்பு!

ABOUT THE AUTHOR

...view details