சென்னை:நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு (TET) ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றோர் நலச் சங்கங்கள் ஒன்றிணைந்து, திமுக தேர்தல் வாக்குறுதி 177-ஐ நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர் நியமனத்தில் நிர்ணயிக்கப்பட்ட வயது உச்சவரம்பை 57 வயதாக உயர்த்த வேண்டும், அரசாணை 149-ல் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டவர்கள் 5ஆவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் பணி வழங்கப்படாதவர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று ( மே 13 ) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில், “பணி வழங்குவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. இதன் காரணமாக சட்ட வல்லுநர்களுடனும், முதலமைச்சரிடமும் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் அமைச்சர்கள் நேரில் வந்து பேச வேண்டும். வெளிநாட்டில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீடியோ கான்ஃபெரன்ஸ் வாயிலாகவாது பேச வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவொளி போராட்டக்காரர்களுடன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கூறினார். அதற்கும் செவி சாய்க்காமல் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில், தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்தவர்களை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு நேரிலேயே வந்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.