எல்கேஜி - யுகேஜி வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல் சென்னை:அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதால், அங்கன்வாடி மையங்களில் ஆரம்பிக்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர் நல கூட்டமைப்பின் தலைவர் அருணன் கூறும்போது, “அரசு பள்ளிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடைபெறுமா என சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என்றும், இந்த வகுப்புகளை எடுத்து வந்த ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பணியிட மாறுதல் பெற்று சென்று விட்டனர்.இதனால் ஆசிரியர் இல்லாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. எனவே அரசுப் பள்ளிகளில் உடனடியாக மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி வைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும், “தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. எல்கேஜி - யுகேஜி வகுப்புகள் மாணவர் சேர்க்கை நடத்த தாமதம் ஆனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து விடும்’ என தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே அதனை அதிகரிக்க அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டது.
அதற்காக 2381 நடுநிலைப் பள்ளிகளுடன் இணைந்து அங்கன்வாடி மையங்களில் துவக்கப்பட்டது. அந்தாண்டில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தற்பொழுது பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள ஆங்கில மோகம் காரணமாக எல்கேஜி, யூகேஜி வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க துவங்கியது. ஆனால் முறையாக மாண்டிச்சேரி படிப்பினை முடித்தவர்களை நியமனம் செய்யவில்லை.
இந்த நிலையில் 2021 ம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றப்போது கரோனா தாெற்று திவிரத்தின் காரணமாக மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள் தொடங்கவில்லை. 2022-23 ம் கல்வியாண்டிலும் மாணவர்கள் சேர்க்கை நடத்தாமல் இருந்தது. இதற்கு பல்வேறுத் தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை எல்கேஜி, யூகேஜி வகுப்பிகளில் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. மேலும் மாண்டி்சசேரி பட்டத்தை பெற்றவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் உறுதி அளித்தது.
இந்த நிலையில் 2022-23 ம் கல்வியாண்டிலும் மாண்டிச்சேரி பட்டம் பெற்றவர்கள் நியமனம் செய்யப்படவில்லை. மாறாக தொடக்கல்வித்துறையின் கீழ் பணிபுரிந்து வந்த தற்காலிகமாக உபரியாக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் இடைநிலை ஆசிரியர்களும் பணியிட மாறுதல் பெற்று சென்று விட்டதால் தற்போதைய நிலையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் மாநாடு; அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்