தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரிக்கை!

தற்போது அமைக்கப்பட்ட மூவர் குழு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க அறிவிக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர் சங்கங்கள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரிக்கை
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரிக்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 11:04 PM IST

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரிக்கை

சென்னை:இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் கூடுதலாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற (TET) இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாட்டை களைந்து மத்திய அரசுக்கு இணையான 9300 - 4200 ரூபாய் ஊதியத்தை வழங்கிட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும், ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஊதிய முரண்பாடு உள்ளது என்பதை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்தது.

அவர்களின் போராட்டம் கடந்த ஆண்டு தீவிரமான போது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை கலைவதற்காக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் ஆகியோர் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் இடைநிலை ஆசிரியர் பணியில் உள்ள அனைத்து சங்கங்களின் கருத்துகளையும் கேட்டு வருகின்றனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரிக்கை

இந்த நிலையில் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள ஐந்து சங்கங்களுடன் இன்று (நவ.8) பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் குமரகுருபரன் கருத்து கேட்டு கூட்டத்தினை நடத்தினார். அந்தக் கூட்டத்தில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் இரா. தாஸ், மாநில தலைவர் லட்சுமிபதி, தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் மயில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின்பொதுச்செயலாளர் வெஸ்லி, தமிழக தொடக்கபள்ளிஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் காமராஜ் உள்ளிட்டோர் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன்,
தொடக்கக்கல்வி இயக்குநர் கண்ணபன் ஆகியோர் பங்கேற்று இடைநிலை ஆசிரியர் ஊதியம் முரண்பாட்டை நீக்கவேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நிலையில் பாதிப்புள்ளதாகவும், மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்.

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு களைதல் கருத்து கேட்பு கூட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் இரா. தாஸ் கூறும்போது, "இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு தொடர்பான கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். அதில் 1.6.1988-க்கு முன் 610 ரூபாயாக இருந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம், நீண்ட போராட்டத்திற்கு பின் 1.6.1988ல் இருந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியமாக ரூபாய் 1,200 ஆக வழங்கப்பட்டது.

அடுத்த ஊதியக்குழுவில் 1.1.1996 ல் 1,200 ரூபாயாக இருந்த இடைநிலை ஆசிரியர் ஊதியம் 4,000 என நிர்ணயம் செய்ததை ஏற்காமல் போராடியதின் விளைவாக, 4,500-125-7,000 என்று ஊதிய நிர்ணயம் செய்து வழங்கப்பட்டது. தொடர்ந்து பெற்றுவந்த மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 1.6.2006 முதல் பறிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர்.

ஆறாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் நிர்ணயம் செய்யும் போது,ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு என்று தவறான கருத்தியலால் ஊதியம் 5,200-2,800 என்று நிர்ணயம் செய்யப்பட்டது. ஊதியம் 5,200-2,800 என்பது அடிப்படைக் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு முடித்து பணியில் சேருபவர்களுக்கு வழங்கக்கூடிய ஊதியமாகும்.

ஆனால்,இடைநிலை ஆசிரியர் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு என்பதை மாற்றி, 1987 முதல் (அதாவது 1987ல் பயிற்சியில் சேர்ந்து 1989ல் முடித்தது முதல்) 12 ம் வகுப்பு அடிப்படைக் கல்வித்தகுதியாக அரசு நிர்ணயம் செய்த நிலையில், 12 வகுப்பு படிக்கும் இரண்டு வருட காலத்தை கணக்கில் கொள்ளாமலும் மற்றும் இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சியை (D.T.Ed.,) கருத்தில் கொள்ளாமல், பத்தாம் வகுப்பு முடித்து பணியில் சேருகின்ற ஊழியருக்கு வைக்க வேண்டிய ஊதிய நிர்ணயம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 5,200-2,800 என்று ஆறாவது ஊதியக்குழு நிர்ணயம் செய்ததால் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மத்திய அரசு வழங்கிய 9,300-4,200 என்ற ஊதிய விகிதம் ஆசிரியர்களைத் தவிர ஏனைய துறைகளில் 12 ம் வகுப்பு மற்றும் தொழிற்கல்வி படித்து பணியில் சேர்ந்தவர்களுக்கு 9,300-4,200 என்ற ஊதிய விகிதத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நிலையில் 31.5.2006 வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு 4,500- 125-7,000 என்ற ஊதிய விகிதம் இருந்தது. ஆறாவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் 5,200- 20,200-ல் இருந்து கூடுதலாகத் தர ஊதியம் 2,800 என குறைத்து திருத்திய ஊதிய விகிதம் 1.6.2006 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

2004ல் தொகுப்பூதியத்தில் (ரூபாய் 3000) நியமிக்கப்பட்டவர்கள் 1.6.2006 முதல் முறைப்படுத்திய நிலையில், 1.6.2006க்கு முன் அவர்கள் பெற்ற ஊதியத்தை 1.86 ஆல் பெருக்கி ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டது. 1.6.2006க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 5,200-2,800 ஊதிய விகிதத்தில், ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதிலிருந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இதுநாள் வரையும் களையப்படவில்லை.

மேலும், ஒரு ஊதிய இழைப்பாக 1.6.2009க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், 1.6.2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் கூடுதலாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற (TET) இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய வித்தியாசம் ரூபாய் 3170 குறைவாக உள்ளது.

1.6.1988ல் இருந்து மத்திய அரசுக்கு இணையாக பெற்றுவந்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் 1.6.2006ல் குறைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் 12.1.2009ல் இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணையில் 4,500-125-7,000 ஊதிய விகிதத்தில் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது(அரசாணை 220/DSE/2008 நாள்.10.11.2008 மற்றும் 237/DSE/2008 நாள்.26.11.2008) சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு கடிதத்திலும் (14.05.2009) ஊதிய விகிதம் 4500-125-7000 என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து தரவரிசை எண்ணுடன் 5 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, 2.7.2009 தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டது. 4,500-125-7,000 என்ற ஊதிய நிலையில் தேர்வு செய்யப்பட்டு 15.7.2009 அன்று நியமன ஆணை வழங்கும்போது, அரசாணை 220/DSE/2008 நாள் 10.11.2008 மற்றும் 237/DSE/2008 நாள் 26.11.2008 அரசாணைக்கு முரணாக 5200-2800- 20200 என நியமன ஆணை வழங்கப்பட்டது. இது அரசே அரசாணையை மீறுவதாக உள்ளது. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய இழப்பை சரிசெய்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று பலகட்ட போராட்டங்களுக்கு இடையில் 2010ல் அப்போதைய அரசு ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்தது. 2012ல் கிருஷ்ணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்தது. மேற்கண்ட குழுக்களின் பரிந்துரை காயத்திற்கு மருந்து போடுவதாக இருந்ததே ஒழிய தீர்ப்பதற்கான வழியாக இல்லை.

எனவே, தற்போது அமைந்துள்ள மூவர் குழு தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் கூடுதலாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற (TET) இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஊதிய முரண்பாட்டை களைந்து, மத்திய அரசுக்கு இணையான 9300-4200 ஊதியத்தை வழங்கிட வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தின் முடிவில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் தெரிவித்ததாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details