சென்னை:இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெயில், மழை என பாராமல் தொடர்ந்து 4-வது நாளாக இன்று (அக்.1), போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உடன் நடத்திய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால், காலவரையற்ற போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட 140க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2023 ஜனவரி ஒன்றாம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவித்த ஊதிய முரண்பாட்டை களைவதற்காக குழுவை அமைத்து, அதன் அடிப்படையில் அறிக்கையை பெற்று மூன்று மாதத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டுகள் களையப்படும் என 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது அறிவித்திருந்தார். ஆனால் அந்தக் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதி 311-ன்படி, இதனை நிறைவேற்ற வேண்டும் என்பதே, இடைநிலை ஆசிரியர்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண்- 311 இல், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு, சம ஊதியம்" வழங்க வேண்டும். 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதிக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதிக்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியம் ரூபாய் 8 ஆயிரத்து 370 என்றும், அதன்பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய் 5 ஆயிரத்து 200 என்றும் "ஒரே பணி, ஒரே கல்வி தகுதி" என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இதனை சரி செய்ய வேண்டுமென போராட்டம் நடத்திய போது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வந்திருந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண்-311 ல் 20ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு, சம ஊதியம்" வழங்கப்படும் எனக் கோரிக்கையை இடம் பெறச் செய்தார். திமுக அரசு பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2022 டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது.
அப்போது 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது தமிழக முதல்வர் 2023ஆம் ஆண்டின் புத்தாண்டில், முதல் அறிவிப்பாக, போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களை கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார். கல்வித் துறை உயர் அதிகாரிகளால் மூன்று மாதத்தில் இப்பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்ட நிலையில் போராட்டத்தை முடிவுக்கு வந்தது. ஆனால் ஏனோ அரசு வாக்குறுதியை நிறைவேற்றவே இல்லை. இதனால் மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.