சென்னை: ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு பணி நியமனத்திற்கான தேர்வினை நடத்த வேண்டும் எனவும், போட்டித் தேர்வு இல்லாமல் பணி நியமனம் செய்யக்கூடாது எனவும் பணி நியமனத்திற்கு காத்திருக்கும் ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
2013ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து, ஆசிரியர் பணி நியமனத் தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மனு வழங்கினர்.
இது குறித்து பணி நியமனத்திற்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் கூறியதாவது, “ஆசிரியர் நியமனத் தேர்விற்கான ஆண்டு அறிக்கை வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தேர்வை நடத்தாமல் இருப்பதால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்து, அரசு வேலைக்காக காத்திருக்கும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் பணி நியமன தேர்வினை நடத்தாமல் நேரடி பணி நியமனம் செய்ய கூடாது.