சென்னை:'அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயிலும் 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டித் திட்டம் (Chief Minister's Breakfast Scheme) விரிவுபடுத்தப்பட வேண்டும்' என வலியுறுத்தி ஆசிரியர்கள் இன்று (செப்.29) பேரணி மேற்கொண்டனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது. சென்னையில் எழும்பூர் லாங்ஸ் கார்டன் ரோடு ரவுண்டனாவிலிருந்து தொடங்கிய பேரணிக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பேரணியை சிஐடியு மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அ.சவுந்தரராசன் தொடக்கி வைத்து பேசினார். பேரணி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் சென்றடைந்தது.
அப்போது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மயில் கூறும்போது, 'தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.
எனவே, திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் எழுத்து மூலமாக கொடுத்த வாக்குறுதிகளின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும், 1.6.2009-க்குப் பின்பு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள மூவர் குழுவின் அறிக்கையை விரைவாகப் பெற்று, ஊதிய முரண்பாடு களைந்திட வேண்டும்.
1.6.2009-க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, நிர்வாக காரணங்களால் 1.6.2009-க்குப் பின்பு நியமன ஆணை வழங்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பு உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். மேலும், மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழ்நாட்டின் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.