சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் கருணாநிதியின் உத்தரவை நிறைவேற்றக் கோரி, சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர் சென்னை: பள்ளிக்கல்வித்துறை செயல்படும் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில், தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ரத்தினகுமார் தலைமையில், பள்ளிக்கல்வித்துறையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அரசாணையை நிறைவேற்ற வேண்டும் எனவும், திமுக ஆட்சியில் தங்களுக்கு விடியல் கிடைக்கும் என எதிர்பார்த்தோம் என்றும்; ஆனால் அது கிடைக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டி கோஷங்களை எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரத்தினகுமார், “கடந்த 2010ஆம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணி நியமனம் பெற்றவர்கள் போக மீதம் உள்ள 2,000 பி.எட். பட்டதாரிகள் மற்றும் 1,500 ஆசிரியர் பட்டயப்படிப்பினை முடித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, தற்போதுள்ள காலிப் பணியிடங்களில் உடனடியாக வயது வரம்பின்றி காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் வழங்கிட வேண்டும்.
தேசிய ஆசிரியர் கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விதிப்படி, 2010 ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு முன் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்திருந்தால் அல்லது பணி நியமனம் நடவடிக்கை தொடங்கி இருந்தால், அவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையும் அறிவித்துள்ளது.
தேசிய ஆசிரியர் கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விதிப்படி, தகுதித்தேர்வு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பின்பற்றியும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2013ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி எங்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி அலுவலர்களின் பேச்சை கேட்காமல் எங்களுக்கு பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் நாங்கள் பழி வாங்கப்பட்டோம். திமுக ஆட்சி அமைந்தால் விடியல் கிடைக்கும் என நம்பினோம். முதலமைச்சர் எங்களுக்கு பணி நியமனம் வழங்கும் வரையில், இங்கிருந்து போக மாட்டோம். எங்களின் சான்றிதழ்களை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சமாதியில் கொண்டு வந்து அளித்துவிட்டு, இறப்பதற்கும் தயாராகவே உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:TRB தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்