சென்னை:கல்லூரிக் கல்வி இயக்குநரகம் டி.பி.ஐ வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில அரசிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பட்டன.
போராட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில தலைவர் பேராசிரியர் காந்திராஜ், "வழங்கப்பட்டு வந்த எம்.பில், பி.எச்.டி பட்ட படிப்புகளுக்கான ஊக்கத்தொகை ஜன.1, 2016-க்கு பிறகு பணியில் சேர்பவர்களுக்கும், பணிக்காலத்தில் பட்டம் பெற்றவர்களுக்கும் நிறுத்தப்பட்டுள்ளதை மீண்டும் யுஜிசி நெறிமுறைகள் 2018 இன் படி வழங்கிட தக்க ஆணையிட வேண்டும்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிமேம்பாடு கோரிக்கைகள் ஏற்கப்பட்டு கடந்த ஜன.11, 2021 அன்று எண் 5 அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அரசாணை நடைமுறைபடுத்தப்படவில்லை. பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு குறிப்பாக பணிமேம்பாட்டு காலத்தை நிறைவு செய்திருக்கக் கூடிய ஆசிரியர்களுக்கு இணைப்பேராசிரியர் பதவி பெற ஏதுவாக முனைவர் பட்டம் பெற விலக்கு வழங்க வேண்டும்.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் அலுவலக பனியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடுவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். எங்கள் அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக முதலமைச்சர் நிறைவேற்றி தர வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டிற்கான தனி கல்விக் கொள்கை விரைவில் வெளியீடு - அமைச்சர் பொன்முடி