சென்னை:இந்தியாவில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட 2009இன் கீழ் ஆசிரியர்கள் பட்டங்களைப் பெற்றிருந்தாலும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மாநிலங்களில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணிக்குத் தகுதிப் பெற்றவர்கள் என தேசிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் 2010ஆம் ஆண்டு அறிவித்தது.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து 2013, 2017, 2019ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டன.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்ற நிலையில், தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆசிரியர்களின் தகுதி சான்றிதழ்கள் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.