சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்ததுபோல் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உடனே வழங்கிட வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும்போது, 'தமிழ்நாடு அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை இன்று (ஆக 13) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் நலன் பாதுகாகப்பட வேண்டும்
ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் திமுக அரசு அமைய வேண்டும் என மிகுந்த முனைப்புடன் செயல்பட்டார்கள். அதேபோல ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது.
கடந்த காலங்களில் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், தமிழ்நாட்டிலேயே ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அதனை பெற்று வந்தார்கள்.
கலைஞர் கருணாநிதியின் தலைமயிலான ஆட்சியிலும், கடந்த திமுக ஆட்சியிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நலன் பாதுகாக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆட்சியிலும், அவை தொடர வேண்டும் என ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மிகுந்த ஏமாற்றம்
நிதி அமைச்சர் அடுத்த நிதி நிலை ஆண்டிலேயே அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இவை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அறிக்கையில் இடம் பெற்று இருந்தது போல், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என்பது குறித்தும், அதனுடைய செயல்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் எவ்விதமான அறிவிப்பும் இல்லாதது, மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நிதி அமைச்சரின் அறிவிப்பை திரும்பப் பெற்று, இந்த மாதம் முதலே அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு இ-பட்ஜெட் 2021-2022: செய்திகள் உடனுக்குடன்...