சென்னை:தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், “திமுக அரசு பதவி ஏற்றதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தீர்க்கப்படும் என ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
ஆனால், மத்திய அரசு, ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. கடந்த முறை 6 மாதம் அகவிலைப்படி பறிக்கப்பட்டது. பங்களிப்பு ஓய்வூதியம் குறித்து எந்த விதமான உறுதியான முடிவையும் தமிழ்நாடு அரசு அறிவிக்கவில்லை. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவது கடினம் என நிதியமைச்சர் கூறுகிறார்.
துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் 3 கட்டப் போராட்டங்களை நடத்த உள்ளோம். வருகிற ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரு நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தமிழ்நாடு முழுவதும் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், விழுப்புரம் என நான்கு மண்டலங்களாகப் பிரித்து ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்தப்படும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சென்னையில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்துவது என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு முடிவெடுத்துள்ளது.