சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் நாளை போராட்டம் அறிவித்திருந்த நிலையில் அதனை அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றி, அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என பெயரை மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. தனியார் பொறியியல் கல்லூரிகளை நிர்வாகம் செய்வதற்காக ஏற்படுத்தப்படும் புதிய பல்கலைக் கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வர தொடங்கியுள்ளது.
அண்ணாப் பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது என அதன் ஆசிரியர்கள், ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும், தமிழ்நாடு ஆளுநருக்கும் முன்னாள் பேராசிரியர்கள் இது குறித்து கடிதம் எழுதியுள்ளனர். மேலும், அண்ணாப் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், நாளை (செப்.28) காலை 10 மணி முதல் 10.30 மணி வரையில் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவுசெய்தனர்.