இது தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”கரோனா வைரஸ் தாக்குதலால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில், மாணவர் சேர்க்கை 2020- 21இல் எப்படி நடக்குமோ என்ற கேள்வியோடு பெற்றோர்கள் இருந்தனர். மாணவர் மற்றும் ஆசிரியர்களும் அதை எதிர்பார்த்திருந்தனர்.
பெற்றோர்கள் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்காக தனியார் பள்ளிகளை விட்டு அரசுப் பள்ளியை நாடிவரும் தேவையும் சூழ்நிலையும் ஏற்பட்ட காரணத்தினால் அரசுப் பள்ளி மற்றும் நிதி உதவிப் பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கையாக முன் வைத்தது.
ஒரு பக்கம் தனியார் பள்ளிகள் இணையவழியில் மாணவர்கள் சேர்க்கையை மறைமுகமாக நடத்திக் கொண்டு வரும் நேரத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை கேள்விக்குறியான நிலையை எட்டி விடும் என்ற அச்சம் மேலோங்குகிறது. ஆகவே, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
தற்போது பள்ளிக்கல்வி அமைச்சர் தமிழ்நாட்டில் 1, 6, 11 ஆகிய வகுப்புகளுக்கான அரசுப் பள்ளி சேர்க்கை நடத்தலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். கட்டணமில்லா கல்வி, விலையில்லா பொருள்கள் ஆகியவற்றை அள்ளித் தந்த அரசுப் பள்ளியிலும், அரசு நிதியுதவி பெறும் பள்ளியிலும் இருக்கும் வாய்ப்பை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.