பத்தாம் வகுப்புத் தேர்வு ரத்து: ஆசிரியர்கள் வரவேற்பு
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தானதை ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனர் மாயவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, 'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அப்பொழுதிலிருந்தே வைரஸின் தாக்கம் குறைந்து பிறகு, பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தோம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை முதலில் தள்ளி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 15ஆம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவித்தனர்.
தற்பொழுது கரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் உள்ளது. எனவே, தேர்வினை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். பத்தாம் வகுப்புத்தேர்வு எழுதும் 10 லட்சம் மாணவர்கள், பதினொன்றாம் வகுப்புத்தேர்வு எழுதும் 8 லட்சம் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தள்ளி வைக்க வேண்டும் என இந்த கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் தேர்வுப்பணியில் 3 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபட இருந்தனர். ஒரு லட்சம் அரசுப் பணியாளர்கள் உட்பட 22 லட்சம் பேரின் நலனைக் கருத்தில் கொண்டு, ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம்.
ஆனால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், 13 ஆயிரம் பள்ளிகளை திறந்து வைத்து தேர்வினை நடத்துவோம் என்பதில் மாநில அரசு உறுதியாக இருந்தது.
எனவே, எங்கள் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். அந்த வழக்கு நேற்று (ஜூன் 8) விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது நீதியரசர்கள், இந்த நேரத்தில் நீங்கள் தேர்வு நடத்துவது சரியா? என கேள்வி எழுப்பினர்.
நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்படுகிறது என அறிவித்த முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' எனத் தெரிவித்தார்.