கரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த வயதினரான முதியோர், குழந்தைகள் ஆகியோரை எளிதில் தாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார்.
திடீரென இந்த விடுமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி,தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் (எல்கேஜி, யுகேஜி) 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில், ஆண்டு விழா, சிறப்பு வகுப்புகள் மார்ச் 16 முதல் 31 ஆம் தேதி வரையிலான விடுமுறை நாள்களில் தனியார் பள்ளிகளில் எந்தவிதமான நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.