சென்னை: திமுகவின் தேர்தல் வாக்குறுதி 311இல் கூறியுள்ளது பாேல், இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டிசம்பர் 27ஆம் தேதி முதல், சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் கூறுகையில், ”தமிழ்நாட்டில் 2009 ஜூன் 1ஆம் தேதிக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
2009 மே 31ஆம் தேதிக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும், 2009 ஜூன் 1ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய வேறுபாடு உள்ளது. மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் இல்லாவிட்டாலும், மாநிலத்தில் பணிபுரியும் பிற ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கூட வழங்காமல், 12 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வருகிறோம்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, கடைநிலை ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் வழங்கப்படுவதில்லை. இங்கு தற்பொழுது மத்திய அரசில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படுகிறது.