சென்னை: நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை, வருகின்ற 13ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் அரசு பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், புதிய ஒய்வூதியத் திட்ட ரத்து, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவற்றும் வகையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் கடந்த ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடு விவரம்
பள்ளிக் கல்வித் துறை:
2018-19ஆம் ஆண்டில் ரூ. 27,205.88 கோடி
2019-20ஆம் ஆண்டில் ரூ. 28,957.62 கோடி
2020-21ஆம் ஆண்டில் ரூ.34,181,75 கோடி
உயர்கல்வித் துறை:
2018-19ஆம் ஆண்டில் ரூ.4620.20 கோடி
2019-20ஆம் ஆண்டில் ரூ. 4584.21 கோடி
2020-21ஆம் ஆண்டில் ரூ.5052.84 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தகவல் தொழில்நுட்பங்களை மேம்படுத்தல், உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல் ஆகியவற்றுக்காக ரூ. 40 ஆயிரம் கோடி அளவிற்கு, பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் உயர் கல்வித் துறைக்கான ரூ. 6 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிதிநிலைத் தாக்கலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பது தொடர்பான காணொலி ஆசிரியர்கள் நியமனம், உட்கட்டமைப்பு மேம்படுத்தல்:
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் பேசுகையில், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஆதரவோடு தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் தேவையான அளவிற்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என்றார்.
காவல்துறைக்கு வழங்கப்படும் விருதினை போல, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விருதுகளும் பணப்பலன், பத்திரங்களாக வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
விருதுகளுடன் பண பலன், பத்திரங்கள்:
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக்ரெய்மாண்ட் பேசுகையில், “ஆசிரியர்களுக்கான விருதுகள் பணப்பலன், பத்திரங்களாக வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் ஒய்வு பெறும் வயதை குறைத்து, ஓய்வூதிய பணப்பலன்களை பத்திரங்களாக வழங்கக்கூடாது.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, ஊக்க ஊதியம், ஜாக்டோ ஜியாே போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து, போராட்ட காலத்திற்கான பண பலன்கள் போன்ற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
உயர் கல்வித்துறையை பொறுத்தவரை, தொழில் துறைக்கு தேவையான மாணவர்களை தயார்படுத்தும் திட்டங்கள் இடம்பெற வேண்டியது மிகவும் அவசியம் எனவும் வலியுறுத்தப்படுகிறது.
துணைவேந்தர் நியமனத்தில் சட்டத்திருத்தம்
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் காந்திராஜ் பேசுகையில், “அரசு உதவி பெறும் கல்லூரியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை, சுயநிதிக்கல்லூரிகளாக மாற்ற அனுமதிக்கக் கூடாது.
தமிழ்நாடு உயர்கல்விமன்றத்திற்கு தனியாக நிதி ஒதுக்கி மேம்படுத்த வேண்டும். முதலமைச்சருடன் கலந்தாலோசித்து, துணை வேந்தரை நியமனம் செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். ”என்றார்.
அரசு போதுமான அளவு வருவாய் இல்லாமல் தவிக்கும் நிலையில், அனைத்துத் துறைகளுக்கும் போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இருப்பினும் மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த பள்ளி, உயர் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதே பலரது கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க:’தற்போதைய நல்ல பெயரை பயன்படுத்தி 100% வெற்றிபெற வேண்டும்’ - கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுரை