ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் வந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்திரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினரால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, ஜூன் 24ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
ராஜாகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி ஆர்.சுதா உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மே 24ஆம் தேதி முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரில் இந்திய தண்டனை சட்டம், போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மாணவி அளித்த புகாரில் 2015ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம் என குறிப்பிட்டுள்ளதாகவும், அப்போது ஆன்லைன் வகுப்புகளே இல்லாத நிலையில் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பின்னர் எவ்வித வழக்குகளும் இல்லாத நிலையில், பாலியல் குற்றவாளி என குண்டர் சட்டத்தில் அடைத்தது சட்டவிரோதம் என குறிப்பிட்டுள்ளார்.