சென்னை:தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் திறமையான மற்றும் தகுதியான ஆசியர்களைப் பணி அமர்த்துவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது.
அதன் படி, நடப்புக் கல்வியாண்டில், நான்காயிரம் உதவி பேராசிரியர் மற்றும் 1766 இடைநிலை ஆசிரியர்கள் உட்பட 6281 காலி பணியிடங்களுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் என அறிவித்துள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள உத்தேச அட்டவணையில் குறிப்பிட்டுள்ளதாவது, ”1766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்பு 2024 ஜனவரி மாதம் வெளியிடப்படும்.
அதே போல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் பணிகளுக்குப் பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதற்காக 2024 ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் 2024 ஜூலையில் நடத்தப்பட உள்ளது.