சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தின் அடைவுத்திறனை சோதனை செய்வதற்கு பி.எட் படிக்கும் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் ஆசிரியர்கள் பலரும் இன்று (ஆக.29) கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் கரோனாவால் ஏற்பட்ட கற்றல் பின்னடைவை சரி செய்வதற்காக “எண்ணும் எழுத்தும் திட்டம்” தொடங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை மதிப்பீடு செய்வதற்கு கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் பயின்று வரும் மாணவர்களைக் கொண்டு, அடைவுத்திறன் தேர்வுகள் மாணவர்களுக்கு நடத்தப்படும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்தது. இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
மேலும், பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் கற்பித்தல் பணியை கல்வியியல் கல்லூரி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்வதா? என கேள்வியும் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் க.அறிவொளி, தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் இணைந்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளை நேரில் அழைத்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் கூறும்போது, '20 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களை பி.எட் கல்லூரிகளில் மாணவர்களாக இருப்பவர்களைக் கொண்டு ஆசிரியர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையை ஏற்க முடியாது எனவும், எண்ணும் எழுத்தும் அடைவுத்திறனை சோதனை செய்யவதை எதிர்க்கவில்லை எனவும் கூறினார். ஆசிரியர்களின் கற்பித்தலை மாணவர்கள் ஆய்வு செய்வார்கள் எனக் கூறியதால் அரசின் மீது கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.