சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பகுதியில் வசித்துவரும் வேலு-ரேகா தம்பதியினரின் மகன் கார்த்திக். இவர் மேடவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில், கார்த்திக் கடந்த மாதம் 4ஆம் தேதி முதல் தனக்கு தலை வலிப்பதாகக் கூறி பள்ளிக்குச் செல்ல மறுத்துவந்துள்ளார்.
இது தொடர்பாக, கார்த்திக்கின் நண்பர்களிடம் பெற்றோர் விசாரித்தபோது, உமா என்ற தமிழ் ஆசிரியை கார்த்திக்கை இரும்பு ஸ்கேலால் தலையில் பலமுறை அடித்தது தெரியவந்துள்ளது. இதனிடையே, மாணவன் கார்த்திக்கின் இடது கண்ணில் வீக்கம் ஏற்பட்டு ரத்தம் கசியத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, கார்த்திக்கை அவனது பெற்றோர் எழும்பூர் கண் மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இதையடுத்து, மாணவனை மீண்டும் சோதித்த மருத்துவர்கள் கண் மட்டுமில்லாமல், மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். தற்போது, மருத்துவர்களின் அறிவுரையின்பேரில் மாணவனின் பெற்றோர் உயர் சிகிச்சைக்காக, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக, பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், ஆசிரியை மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.