தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘சொத்துக்களை வாங்கி வரி ஏய்ப்பு செய்தவர்கள் சிக்குவார்கள்’ - வருமானவரித்துறை நுண்ணறிவு பிரிவு எச்சரிக்கை!

18 பிரிவுகளின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் 270 சார்பதிவாளர் அலுவலகங்கள் நிதி பரிவர்த்தனை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என வருமானவரித்துறை நுண்ணறிவு பிரிவு தெரிவித்துள்ளது.

‘கணக்கு காட்டாமல் சொத்துக்களை வாங்கி வரி ஏய்ப்பு செய்தவர்கள் சிக்குவார்கள்’ - வருமானவரித்துறை நுண்ணறிவு பிரிவு
‘கணக்கு காட்டாமல் சொத்துக்களை வாங்கி வரி ஏய்ப்பு செய்தவர்கள் சிக்குவார்கள்’ - வருமானவரித்துறை நுண்ணறிவு பிரிவு

By

Published : Jul 4, 2023, 10:51 PM IST

சென்னை: கணக்கு காட்டாத சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடத்த தொடங்கிய போது நில மதிப்பீட்டை குறைத்துக் காட்டி பல சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ததை கண்டுபிடித்துள்ளது வருமான வரித்துறை. மேலும் செங்குன்றம் மற்றும் உறையூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறை நுண்ணறிவுப் பிரிவு சோதனை நடத்திவருகிறது.

வருமான வரித்துறைக்கு ஆண்டுக்கு ஒரு முறை எஸ்எப்டி எனப்படும் நிதி பரிவர்த்தனை அறிக்கையை பொதுமக்கள் பணப்பரிவர்த்தனை மற்றும் முதலீடு தொடர்புடைய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்த நிதி பரிவர்த்தனை அறிக்கையை சமர்பித்து வருகிறது.

வருமானவரித்துறை 18 பிரிவுகளின் கீழ் தமிழ்நாட்டில் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து இந்த அறிக்கையை பெற்று வருகிறது. இந்நிலையில் பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் முறையாக நிதி பரிவர்த்தனை அறிக்கையை கணக்கு காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, வருமானவரித்துறை நுண்ணறிவுப் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி அபராதம் விதிப்பதற்கான அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.

அந்த அடிப்படையில் இந்த 18 பிரிவுகளின் கீழ் செயல்படும் ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து சோதனை நடத்தி முறைகேடுகளை வருமானவரித்துறையினர் கண்டுபிடித்து வருகின்றனர். முதற்கட்டமாக அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் சுமார் 13.5 கோடி ரூபாய்க்கு முறையாக அறிக்கை காட்டப்படவில்லை என கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பிறகு வணிக வங்கிகளில் ஆய்வு மேற்கொண்டதில் தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்ட தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 410 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கு காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது இதன் தொடர்ச்சியாக அடுத்த கட்டமாக சார்பதிவாளர் அலுவலகங்களை வருமானவரித்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்த துவங்கியுள்ளனர். 30 லட்சம் ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை கொண்ட பத்திரப்பதிவுகளை முறையாக கணக்கு காட்டப்பட வேண்டும் .

இதையும் படிங்க: பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் மீது ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் அதிருப்தி!

ஆனால் பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்களில் பான் மற்றும் ஆதார் அட்டை இல்லாமலேயே பத்திரப்பதிவுகள் நிகழ்வதாகவும் கண்டுபிடித்துள்ளனர். பெருந்தொகை பணப்பரிவர்த்தனையில் நில பத்திரப்பதிவுகள் நடைபெறுவதாகவும், அது குறித்து நிதிபரிவர்த்தனை அறிக்கையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் கணக்கு காட்டவில்லை என்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மொத்தமுள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் 270 சார்பதிவாளர் அலுவலகங்கள் நிதி பரிவர்த்தனை அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறாக பெரும் தொகை பணப்பரிவத்தனையை கணக்கு காட்டாமலும் நில மதிப்பீட்டை குறைத்து பத்திரப்பதிவு மேற்கொண்டது தொடர்பாகவும் பல்வேறு வகையில் முறையாக கணக்கு காட்டாத சார் பதிவாளர் அலுவலகங்களில் பட்டியலை தயாரித்து சோதனையை துவங்கி உள்ளது.

சென்னை செங்குற்றம் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் முதற்கட்டமாக வருமான வரி துறைச் அதிகாரிகள் சோதனையை துவங்கியுள்ளனர். காலையிலிருந்து ஆறு மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனை என்பது நடைபெற்று வருகிறது. குறிப்பாக சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த ஐந்து ஆண்டு நிதி பரிவர்த்தனை அறிக்கையை அடிப்படையாக வைத்து சோதனை மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சார்பதிவாளர் அலுவலகங்களிளும் ஒவ்வொரு ஆண்டும் சோதனை நடத்தப்படும் சார்பதிவாளர் அலுவலகங்களில் நில பத்திரப்பதிவு செய்த நபர்களின் தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கலில் ஒப்பிட்டுப் பார்த்து, முறையாக கணக்கு காட்டப்பட்டுள்ளதா என சோதனை நடத்தி வருகின்றனர். இது போன்று கோடிக்கணக்கான ரூபாய் பணப்பரிவர்த்தனையில் நில பத்திரப்பதிவை கணக்கு காட்டாத காரணத்தினால் பலரும் தனிநபர் வருமான வரி தாக்கலில் மோசடி செய்துள்ளதையும் வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அவ்வாறு கணக்கில் காட்டாமல் சொத்துக்களை சேர்த்து வரி ஏய்ப்பு செய்த நபர்கள் மீதும் வருமானவரித்துறை நடவடிக்கை பாயும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை தமிழக முழுவதும் அடுத்தடுத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் தொடரும் எனவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பல சார்பதிவாளர்கள் மற்றும் கணக்கு காட்டாமல் சொத்துக்களை வாங்கி வரி ஏய்ப்பு செய்த நபர்கள் சிக்குவார்கள் என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வேங்கை வயல் விவகாரம் - டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கு நாளை டிஎன்ஏ பரிசோதனை

ABOUT THE AUTHOR

...view details