சென்னை:தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைந்துள்ள பார்களில் காலி பாட்டில்களை சேகரிக்கவும், தின்பண்டங்கள் விற்கவும் உரிமம் வழங்குவதற்காக டாஸ்மாக் நிர்வாகம், அக்டோபர் 6ஆம் தேதி டெண்டர் கோரியது.
நடப்பாண்டு நவம்பர் முதல் தேதியில் இருந்து, 2025 அக்டோபர் வரையிலான காலகட்டத்திற்கான இந்த டெண்டரில், பார்கள் அமைந்திருக்கும் நிலங்களின் உரிமையாளர்களிடம் இருந்து தடையில்லா சான்று மற்றும் வாடகை ஒப்பந்தம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் டெண்டர் இறுதி செய்யப்பட்ட 7 நாட்களுக்குள் தடையில்லா சான்று வழங்காவிட்டால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, அடுத்து அதிக தொகைக்கு உரிமம் கோரியவரிடம், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்று கேட்கப்படும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் கொடுக்கும் வகையில் இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர் கிழக்கு, காஞ்சிபுரம் வடக்கு மற்றும் தெற்கு, ஈரோடு ஆகிய ஏழு வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.