டான்சி நிறுவன முதன்மைச் செயலர் ச.விஜயகுமார் ஐ.ஏ.எஸ் சென்னை: டான்சி நில பேர வழக்கில் ஜெயலலிதா:1991-96 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் ஜெ.ஜெயலலிதாவுக்கு எதிரான ஒரு பரபரப்பான வழக்கு ஆகும். ஜெ. ஜெயலலிதா மற்றும் அவரது தோழி வி.கே. சசிகலா ஆகியோர் பங்குதாரர்களாக இருந்த, ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களானது, 1992ஆம் ஆண்டில் மாநில அரசு நிறுவனமான தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்தின் (டான்சி) நிலங்களை வாங்கியது.
இதை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தாக்கல் செய்தார். மேலும், 1996இல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசாங்கத்தின் ஆட்சியின்போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர்கீழ் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டனர்.
இதில் அவருக்கு 2000ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதியன்று, 2 ஆண்டுகள் கடுஞ் சிறைத்தண்டனையும், ரூ 50ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பின் காரணமாக 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா தகுதி நீக்கம் செய்யப்பட காரணமான இந்த வழக்கு அரசியல் தாக்கங்களைக் கொண்டிருந்தது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும், தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின்னர் அவர் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
இதில், தலையிட்ட உச்ச நீதிமன்றம் அவரை செப்டம்பர் 2001ஆம் ஆண்டில் தகுதி நீக்கம் செய்தது. இதன் விளைவாக அவர் பதவி விலகினார். 2001ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் டான்சி நில பேரம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் ஜெயலலிதாவை விடுவித்தது. இதன் பிறகு இவர் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். இப்படியாக டான்சி என்ற துறை இருப்பது குறித்து பொதுமக்களிடம் கவனத்தை ஈர்த்தது.
தமிழ்நாடு சிறுதொழில் கழகம்(டான்சியின்) உருவாக்கம்:தமிழ்நாடு சிறுதொழில் கழகம் 1965ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது டான்சி என்று பிரபலமாக அறியப்படுகிறது. அரசாணை எண் 1895, தொழில் தனி (நாள்: 1.4.1965) அரசிடமிருந்து 64 துறை சார்ந்த சிறிய அளவிலான அலகுகள் நிகர சொத்துக்கள் ரூ.668.612 லட்சம் மதிப்பில் கையகப்படுத்தப்பட்டன.
தொடக்கத்தில், இந்தத் தொழில்துறை அலகுகள் தொழில்துறை மற்றும் வணிக இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சேவை நோக்கங்களுக்காக திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டன. பயிற்சி மற்றும் செயல் விளக்க மையங்களாக செயல்பட, தொழில்களின் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்புகளை வழங்குதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி பரவுவதை உறுதி செய்ய இப்பயிற்சியின் பங்கு முடிந்துவிட்டது என்று கருதப்பட்டது.
இருந்தாலும், சிறுதொழில்கள் வயது கடந்து விட்டநிலையிலும் மேலும் இதுபோன்ற பயிற்சி தொடர அவசியமில்லை என்று கருதியதால், இந்தப் பயிற்சி மற்றும் உற்பத்தி அலகுகள் அனைத்தும் உற்பத்தி அலகுகளாக டான்சியின் கீழ் கொண்டு வரப்பட்டன. நாட்டிலேயே சிறுதொழில் துறையில் தனது இருப்பை நிலைநிறுத்திய முதல் நிறுவனம் டான்சியாகும்.
டான்சி நிறுவனத்தின் முதன்மைச் செயலர் ச.விஜயகுமார் ஐஏஎஸ் நமக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், “அரசு துறைகளுக்குத் தேவைப்படுகின்ற தளவாட சாமான்கள், இரும்பு மற்றும் மரம் ஆகிய சார்ந்த பொருட்கள் எதுவாக இருந்தாலும் டான்சி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. டான்சியில் 20 யூனிட் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மரத்தினால் ஆன வீட்டு பொருட்கள் மற்றும் இரும்பினால் ஆன பொருட்கள் செய்து வழங்கப்படுகிறது. சுத்தம் செய்யும் திரவம், உயர்தர வண்ணப்பூச்சுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. கடந்த 2011 முதல் 2021 வரை சராசரியாக ரூ.33 கோடி மட்டுமே வருடத்திற்கு டான்சி வருவாய் ஈட்டி வந்தது.
அரசு தந்த உத்வேகத்தின் அடிப்படையில் கடந்த 2022ஆம் ஆண்டு 33 கோடியில் இருந்து ரூ.115 கோடிக்கு ஆர்டர்கள் பெறப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறோம். தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு பொருட்களை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த ஆண்டு 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உற்பத்தி செய்து உள்ளோம். டான்சியின் பொருட்களை தனியாரில் விற்பனை செய்ய, இ-காமர்ஸ் என்ற திட்டத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் உணவு நிறுவனங்கள் மற்றும் தனியார் பள்ளிகளின் சார்பில் டான்சிக்கு உற்பத்தி செய்வதற்கான ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது உள்ள நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளது. டான்சில் பணப்பரிவர்த்தனை மிக எளிதாக நடைபெறுகிறது. விரைவாக பணம் பரிவர்த்தனை நடைபெறுகிறது. டான்சி நிறுவனம் அரசு இ-விற்பனை முகமையில் (GEM PORTAL) பதிவுசெய்து கொள்முதல் மற்றும் விற்பனை சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்படும் "நம்ம School" என்கின்ற திட்டத்திற்கு டான்சி நிறுவனம் நன்கொடையாக ரூ.4 கோடியினை அளித்துள்ளது. புதிதாக ஓமலூர் மற்றும் ராணிப்பேட்டையில் நிறுவனம் தொடங்கி உள்ளோம். இதன் காரணமாக அந்தப் பகுதியில் வாழும் எங்களை சார்ந்து உள்ளவர்களுக்கு இது பயனளிக்கும். கரோனா காலத்தில் இத்துறை சார்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்பைத் தர முடிந்தது.
கடந்த ஆண்டில் இரண்டரை கோடி ரூபாய் லாபம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 8 முதல் 9 கோடி ரூபாய் வரை லாபம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, டான்சி நிறுவனத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து, விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். டான்சியில் செய்யப்படும் அனைத்து பொருட்களும் தரம் மிக்கதாக உள்ளது.
டான்சியின் பொருட்களை விற்க தமிழ்நாடு முழுவதிலும் டிஸ்ட்ரிபியூட்டர்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை, திருநெல்வேலி, சென்னை, ராணிப்பேட்டை, உள்ளிட்ட 17 மாவட்டங்களில் டான்சி நிறுவனத்தின் யூனிட்டுகள் உள்ளன. டான்சியின் இடங்களை மின்சாரத்துறை மற்றும் எம்எஸ்எம்இ(msme) போன்ற போன்ற துறைகளுக்கு வழங்கி அதன் மூலம் லாபம் ஈட்டி வருகிறோம். இங்கு வேலைவாய்ப்பை பொறுத்தவரை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மணல் குவாரிகளால் காத்திருக்கும் பேரழிவு குறித்து சிறப்பு அலசல்!