சென்னை:முதுகலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான சீட்டா (CEETA) மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுவிற்கான (டான்செட் - 2023) தேர்வு முடிவுகள் நாளை (ஏப்ரல் 14) வெளியிடப்படும் எனவும், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிக்கப்பட்டுள்ளது.
இதில் டான்செட் எம்சிஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை மார்ச் 25ஆம் தேதி காலையிலும், எம்பிஏ படிப்பிற்கான தேர்வினை மார்ச் 25ஆம் தேதி மாலையிலும் தேர்வர்கள் தேர்வெழுதினர். அதேபோல், CEETA-PG எம்இ, எம்டெக், எம்.ஆர்க் மற்றும் எம்.பிளான் ஆகிய படிப்பில் சேர்வதற்கான தேர்வு மார்ச் 26ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முதுகலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான சீட்டா மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுவிற்கு (TANCET 2023) பிப்ரவரி 28ஆம் தேதி வரையில் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
டான்செட் எம்சிஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை மார்ச் 25ஆம் தேதி காலையில் எழுதுவதற்கு விண்ணப்பம் செய்திருந்த 9 ஆயிரத்து 820 மாணவர்களில், 9 ஆயிரத்து 279 மாணவர்கள் தேர்வினை எழுதினர். 541 மாணவர்கள் தேர்வினை எழுதவில்லை. அதேபோல் எம்பிஏ படிப்பிற்கான தேர்வினை மார்ச் 25 அன்று மாலையில் 24 ஆயிரத்து 468 பேர் பதிவு செய்ததில், 22 ஆயிரத்து 774 மாணவர்கள் தேர்வெழுதினர். ஆயிரத்து 703 மாணவர்கள் தேர்வினை எழுதவில்லை.