சென்னை: முதுகலை பொறியியல் படிப்புகளான எம்.இ, எம்.டெக், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுவிற்கான (டான்செட் - 2023) எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை ஏப்ரல் 20-ந் தேதி முதல் மே 20-ந் தேதி வரையில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும் அறிக்கப்பட்டுள்ளது.
டான்செட் எம்சிஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை மார்ச் 25 ந் தேதி காலையிலும், எம்பிஏ படிப்பிற்கான தேர்வினை மார்ச் 25 மாலையில் எழுதினர். CEETA - PG எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் ஆகிய படிப்பில் சேர்வதற்கான தேர்வு மார்ச் 26 ஆம் தேதி நடத்தப்பட்டது.
இது குறித்து அண்ணா பல்கலைக் கழக பொது நுழைவுத்தேர்வு செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ, எம்.டெக், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வுவிற்கு (டான்செட் - 2023) பிப்ரவரி 28-ந் தேதி வரையில் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
டான்செட் எம்சிஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை மார்ச் 25 ஆம் தேதி காலையில் எழுதுவதற்கு விண்ணப்பம் செய்திருந்த 9820 மாணவர்களில், 9279 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் சுமார் 541 மாணவர்கள் தேர்வினை எழுதவில்லை. எம்பிஏ படிப்பிற்கான தேர்வினை மார்ச் 25 மாலையில் 24,468 பதிவு செய்ததில், 22,774 மாணவர்கள் எழுதினர். அதிலும் சுமார் 1703 மாணவர்கள் தேர்வினை எழுதவில்லை.