கரோனா தொற்றுப் பரவல் கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணியை தமிழ்நாடு அரசு ஒத்திவைக்க வேண்டும் என, அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நாடு முழுவதும் 10, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ஜூலை மாதம் நடத்தவுள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தொடர்ந்து நீட் தேர்வு ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளதாக தேசியத் தேர்வு முகமையும் (NTA), கல்லூரிகளில் இளங்கலை பாடங்களுக்கான சேர்க்கையானது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநரகமும் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று முழுமையாக இன்னும் நீங்கவில்லை. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் எவ்வித தளர்வுகளும் இன்றி பிற மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையும் உள்ளது.
ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதையடுத்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் மீண்டும் தங்களின் பணியிடங்களுக்கு திரும்புவதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம் உள்ளன. 80 விழுக்காடு ஆசிரியர்கள், பெண் ஆசிரியர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருசக்கர வாகனங்களில் வெகு தொலைவு பதற்றத்துடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.