சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(மே.13) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத் தீவிர 'மோக்கா' புயலானது நேற்று(மே.12) இரவு 11.30 மணி அளவில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்குத் திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணி அளவில் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 560 கிலோ மீட்டர் வடக்கு - வடமேற்கே நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு-வடகிழக்குத் திசையில் நகர்ந்து நாளை நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை மிகத்தீவிர புயலாக கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 175 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
புயல் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.