சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவ-15) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(நவ.15) ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை(நவ.16) ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவ.17, 18 மற்றும் 19ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இன்று அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸாகவும்; நாளை (நவ-16) 31 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். மேலும் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவிலும், நாளை 25 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நவம்பர் 16 மற்றும் 17ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும், இது மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 18ஆம் தேதி வாக்கில் வலுப்பெறக்கூடும்.